12- அரிச்சந்திரன் கதை
இக்சுவாகு பரம்பரையில் வந்த அரிச்சந்திரனுக்கு மகன் இல்லை.நாரதர், அரிச்சந்திரனைப் பார்த்து ,"நீ கங்கைக் கரை சென்று வருணனைக் குறித்து பிரார்த்தனை செய்தால் உனக்கு மகன் பிறப்பான்'என்று கூறினார்.அவனும் அவ்வாறே செய்ய,அவன் முன் தோன்றிய வருணன்"உனக்கு ஆண் குழந்தை பிறக்குமாறு வரம் தருகிறேன்.ஆனால் என்னைக் குறித்து ஒரு யாகம் செய்து அரிச்சந்திரனும் அதில் உன் மகனை பலியிடுவதானால் உனக்கு ஆண் மகன் பிறப்பான்"என்றார். அரிச்சந்திரனும் ஒப்புக் கொண்டான்.மகன் பிறந்த ஏழாம் ஆண்டு,பதினாறாம் ஆண்டு முடியும்போதெல்லாம் வருணன் வந்து எப்போது யாகம் எனக் கேட்கும் போதெல்லாம் அரிச்சந்திரன் ஒவ்வொரு சமாதானம் கூறினான்.மகனுக்கு பதினாறு வயது ஆகும் போது வருணன் மறுபடியும் வந்து கேட்டான்.உடன் இருந்தமகன் ரோஹிதன்,"விஷ்ணுவைக் குறித்து யாகம் செய்யப் போகிறேன்.முடிந்தவுடன் உனக்கு பலியாவேன்"என்றான்.யாகம் செய்ய காட்டிற்குப் போனப்போது "அஜிகர்தா" என்ற முனிவரை சந்தித்து தன் வரலாற்றைக் கூறினான்.அது கேட்ட முனிவர், தன் மூன்று பிள்ளைகளில் தனக்கு வேண்டிய முதல் மகனையும், மனைவிக்கு வேண்டிய மூன்றாவது மகனையும் விட்டு விட்டு நடு மகனைப் பலிக்கு அழைத்து செல்.அவனுக்கு விலையாக ஆயிரம் பசுக்கள்,ஆயிரம் பொற்காசுக்கள் நிறைந்த செல்வம் என்பனவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும்"என்றார்.அவ்வாறே செய்து விட்டு அம்முனிவரின் நடுமகனாகிய "கன சேபா"வை அழைத்துக் கொண்டு அரிச்சந்திரன் மகன் மீண்டான்.அப்போது அசரீரி ஒன்று பேசிற்று,"நீ யாரையும் பலியிடத் தேவையில்லை.கௌதம கங்கைக் கரையில் யாகம் செய்தால் எந்தப் பலியும் தேவையில்லை"என்று கூறிற்று.அரிச்சந்திரனும் அவ்வாறே செய்தான்.
ததீசியின் கதை
----------------------
ததீசி என்ற முனிவர் லோபாமுத்ரா என்ற தன் மனைவியுடன் கங்கைக் கரையில் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார்.அவரது தவப்பயன் காரணமாகத் தைத்தியர்கள்,அரக்கர்கள்,அசுரர்கள் ஆகியோர் அச்சம் காரணமாக அவர் எல்லைக்குள் நுழைய முயன்றதே இல்லை.ஒருமுறை தேவ, அசுரர் போரில் தேவர்கள் வென்றனர்.வெற்றியடைந்த அவர்கள் ததீசியிடம் வந்து "ஐயனே! உமது ஆசிர்வாதத்தால் நாங்கள் அசுரர்களை வென்றோம்.போர் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் இப்போது தேவையில்லை.ஆதலால் அசுரர்கள் இவற்றை கவர்ந்து செல்ல முடியா ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்க விரும்புகிறோம்.அவர்கள் அண்ட முடியா இடம் என்றதும் உங்கள் ஆசிரமமே ஞாபகம் வந்தது.ஆதலால் அவற்றை இங்கே விட்டு விட்டுச் செல்கிறோம்."என்று கூறினர்.ஆண்டுகள் பல சென்றன.ஆயுதங்கள் பளபளப்பு குன்றி தங்கள் மந்திர சக்தியை இழக்கத் தொடங்கின.இந்த நிலையில் லோபமுத்திரை"தாங்கள் செய்வது சரியில்லை? உல்க பந்தங்களிலிருந்து விடுபட்ட நீங்கள்..இந்த பொருட்களை வைத்து இருப்பது நல்லது அல்ல.மேலும் அசுரரகள், விரோதியான தேவர்கள் ஆயுதங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என அறிந்தால் உங்கள் மீது விரோதம் பாராட்டுவார்கள்' என்றாள்.
அதைக் கேட்ட முனிவர், "நீ சொல்வது சரிதான்.ஆனால் வாக்குக் கொடுத்து விட்டேனே..அதை மீற முடியாது"என்றார்.இந்நிலையில் ஆயுதங்கள் ஒளி இழப்பதை அறிந்த முனிவர் அவற்றை கங்கை நீரில் கழுவி அந்நீரை குடித்து விட்டார்.ஆயுதங்கள் சக்தி முழுதும் அவர் உடலில் சேர்ந்து விட்டது.பல ஆண்டுகள் ஓடின.திடீரென ஆசிரமம் வந்த தேவர்கள்"முனிவரே!அசுரர்கள் கை ஓங்கி விட்டது..எங்கள் ஆயுதங்களைக் கொடுங்கள்"என்றனர்.
முனிவர்,நடந்ததைக் கூறி, "நான் யோகத்தால் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன்.என் உடம்பில் உள்ள முதுகெலும்பைக் கொண்டு நீங்கள் புதிய ஆயுதம் செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு உயிரை விட்டார்.அவரது எலும்பைக் கொண்டு விஸ்வகர்மா "வஜ்ராயுதம்" என்ற ஆயுதத்தைப் படைத்தார்.அதை எடுத்துக் கொண்டு தேவர்கள் சென்று விட்டனர்.அச்சமயம் லோபமுத்திரை அங்கு இல்லை.வந்தவள், நடந்ததை அறிந்து தன் குழந்தை பிறக்கும்வரை காத்திருந்து பிறகு நீரில் மூழ்கி உயிரை விட்டாள்.இறப்பதற்கு முன் தான் பெற்ற மகனை ஒரு அத்தி மரத்திடம் ஒப்படைத்து விட்டுச் சென்றாள்.அத்தி மரத்தால் வளர்க்கப்பட்ட அவன் அத்திமரத்தின் வடமொழி பெயராகிய "பிப்பலா" எனும் பெயரினைப் பெற்றான்.ஒருமுறை அவன் அத்தி மரத்திடம், "தன் பெற்றோர் யார்?" எனக் கேட்க, அத்திமரம் நடந்ததைக் கூறியது.தேவர்கள் மீது கோபம் கொண்ட பிப்பலா தேவர்களை அழிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் சிவனை நோக்கி தவம் இருந்தான்.சிவன் தோன்றியவுடன் "தேவர்களை அழிக்க வேண்டும்"என வேண்டினான்.அது கேட்டு சிவன்"என் நெற்றியில் உள்ள மூன்றாவது கண் எப்போது உனக்குத் தெரிகிறதோ அப்போது உன் விருப்பம் நிறைவேறும்" என்றார்.
பல ஆண்டுகள் தவத்திற்குப் பின் சிவனின் நெற்றிக் கண்ணைப் பார்க்கும் ஆற்றல் பெற்றான் பிப்பாலா.நெற்றிக்கண்ணிலிருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டு "உன் விருப்பம் என்ன?" என்றது. "தேவர்களை அழித்து விடு" என்றான்.உடனே பூதம் அவனுடன் போருக்குச் சென்றது.பிப்பாலா..அதற்கானக் காரணம் கேட்டான்."ததீசியின் மகனான நீயும் தேவர்தானே..ஆதலால் எனக்கு தேவர்களை அழிக்கும் மனநிலை உன்னிலிருந்துதான் தொடங்குகிறது"என்றது.தப்பி ஒடியவன் சிவனை தஞ்சம் அடைந்தான்.சிவனும், "தேவர்களை அழிப்பதால் உனக்கு எந்த பயனும் இல்லை.நீ இப்போது உன் தாய-தந்தையை தரிசிக்கலாம் என்றதும்..ஒரு விமானத்தில் ததீசியும்,லோபமுத்திரையும் வந்தனர்.பிப்பாலா அவர்களை வணங்கினான்."மணம் செய்து கொண்டு சுகமாக வாழ்வாயாக"என அவர்கள் அவனை வாழ்த்திச் சென்றனர்.
Comments
Post a Comment