பிரம்மபுராணம் - 8



பூரி ஜகன்னாதர் ஆலயம் தோன்றிய கதை.

------------------------------------------------------ 

சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ  தேசத்தை அவந்தி எனும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.


கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும்,இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்ரவனாவான்.வெறும் உடல் வன்மையோடு மட்டுமின்றி , வேதங்கள்,சாத்திரங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.போர்க் கருவிகள் அனைத்தையும் கையாளும் பேராற்றல் பெற்றிருந்தான்.சுருங்கச் சொன்னால் அவனுக்கு நிகர் பூவுலகிலோ அல்லது தேவருலகிலோ இல்லை எனலாம்.அப்படியிருந்தும் சிறிதும் அகங்காரமின்றி விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான்.தனக்குள்ள செல்வம்,ஆற்றல், அதிகாரம்,செல்வாக்கு என அனைத்தையும் பயன்படுத்து ஒரு வழி கண்டான். தன வழிபடும் விஷ்ணுவிற்கு அன்றுவரை யாரும் கட்டாத கோயில் ஒன்றினைக் கட்ட தீர்மானித்தான்.அது சிறந்த கோயிலாக அமைவதுடன்..அக்கோயில் அமைகின்ற இடமும் ஈடு இணையற்றதாக இருக்க வேண்டும்  என்று எண்ணினான்.எங்கும் பரவியிருந்த அவன் செல்வாக்குக் காரணமாக எல்லாத் தீர்த்தங்களையும்..இரு மருங்குகளிலும் அமைந்துள்ள புண்ணியத் தலங்களைப் பார்த்து அலசி ஆராய்ந்தான்.அவனது தலைநகரமான் அவந்தியும், அதைச் சுற்றியுள்ள பகுதியும் மிகவும் அருமையாக இருந்தன.பெரிய பெரிய விண்ணை முட்டும் கட்டிடங்களும் இருந்தன.ஓயாத மக்கள் நடமாட்டமும் ,பெரும் வாணிபம் நடைபெறுகின்ற கடைவீதிகள் நிறைந்திருந்த அவந்தியில்..விஷ்ணு கோயில் கட்ட அவன் மனம் ஏனோ இடம் தரவில்லை.

சிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரில், அந்நதிக் கரையில் மிகப் பிசித்தமான மகாகாளர் திருக்கோயில் என வழங்கப்படும் சிவன் கோயிலும், கோவிந்தசாமி,விக்கிரம சாமி என்ற பெயரில் இரண்டு விஷ்ணு கோயிலும் ஏற்கனவே இருந்தன.மகாகாளர் கோயிலைப் பொறுத்த மட்டில் ஒரு தனிச் சிறப்புண்டு.அவரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு என்றும் சொல்லப்பட்டது.இவ்வாறு இருந்தும் அரசனின் மனம் இங்கு லயிக்கவில்லை.

அதனால் தனது பரிவாரங்களுடன் சிறந்த இடம் தேடிப் புறப்பட்டான். நீண்ட தேடலுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான்.அழகு வாய்ந்த்தும், இயற்கை எழில் கொஞ்சுவதும், பறவைகள் மகிழ்ச்சியுடன் திரிவதுமான புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் இடத்தை அடைந்தவன்,தான் நினைத்த ஆலயத்தைக் கட்ட இதுவே சிறந்த இடம் என உணர்ந்தான்.

இந்த பகுதிக்கு புருஷோத்தம க்ஷேத்திரம் என்ற பெயர் வர ஒரு காரணம் இருந்தது.பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியான பெரும் பகுதி பெற்ற மகாவிஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது.யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவரது பாபங்கள் அனைத்தும் அப்பொழுதேநீங்கி விடும்..எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையினை தரிசித்து  பாவங்களிலிருந்து மீண்டதால்,எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று.அதனால் எமன் மகாவிஷ்ணுவை வணங்கி தன் குறையினைத் தெரிவித்தான்.அவனது குறையினைப் போக்க மகாவிஷ்ணு இந்த பிரசித்தி பெற்ற சிலையை மண்ணுக்குள் புகுத்தி விட்டார்.அதனால், மக்கள் முன்போல வந்து உடனடியாக தங்கள் பாபத்தைப் போக்கிக்  கொள்ள முடியவில்லை..ஆயினும் ஊருக்கு இருந்த மதிப்பு குறையாமல் இருந்தது.புருஷோத்தமன் என்பது மகாவிஷ்ணுவிற்கு ஒரு பெயராகும்..அவரால் பிரசித்தி பெற்ற இடம் புருஷோத்தம நகர் எனப் பெயர் பெற்றது..இந்திர தூய்மன் மனதில் நிறைவு ஏற் பட..வேறு இடம் வேண்டாம்..என்ற எண்ணம் ஏற்பட்டது.மிகச் சிறந்த இவ்விடத்தில் ஈடு இணையில்லா விஷ்ணு ஆலயத்தை நிர்ணயிக்கத் தீர்மானித்தான்.


பேரரசான அவன் தான் மட்டும் இதனைச் செய்யாது பிற அரசரகள்,செல்வர்கள்,வணிகர்கள் ஆகியோர்களும் பங்கு பெற வேண்டி அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான்.கோயில் எப்படி கட்ட வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று.அதற்கு வேண்டிய பொன்,பொருள் கணக்கின்றிக் கிடைத்தன.கோயில் நிர்மாணம் தொடங்கு முன் ஒரு அஸ்வமேதயாகம் செய்ய மன்னன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது.பரத கண்டம் முழுதிலிமிருந்து ம்ன்னரும், மக்களும் பொன்னையும், பொருளையும் கொடுத்தனர்.இந்த யாகத்தில் கிடைக்கும் தானத்தைப் பெற அந்தணர்கள் நாடு முழுதுமிலிருந்து வந்து கூடினர்.அஸ்வமேதயாகம் முடிந்ததும் கோயில் கட்டும் பணி துவங்கி அதுவும் முடிந்து விட்டது.எந்த விக்கிரகத்தை ,இங்கு பிரதிஷ்டை செய்வது எனும் கவலையுடன் உறங்கிய மன்னனுக்கு, விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனை பயன் படுத்திச் சிலை செய்யுமாறு கூறினார்.


மறுநாள் அந்த மரததை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன்,கிருஷ்ணன்,சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் வினாடி நேரத்தில் செய்து முடித்தனர்.


(அந்த ஆலயமே இன்றும் பிரசித்திப் பெற்று விளங்கும் பூரி ஜகன்னாதர் ஆலயமாகும்)  


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11