விஷ்ணு புராணம் - 5


 


பிரகலாதன் கதை

----------------------------

தைத்திரியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன்.மாபெரும் தவங்கள் செய்து மூவுலகினையும் ஆளும் சக்தியினைப் பெற்றான்.தவிர,இந்திரன்,அக்னி,யமன்,நிருதி,வருணன்,வாயு,ஆகியவர்களையும் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான்.அவர்கள் அனைவரும் இங்கும்அங்கும்  அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவை சரணடைந்தனர்.


எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்யகசிபு தனக்கு மேல் யாருமில்லை,யாரும் இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்தான். அதனால் தைத்திரியர்கள்,தேவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் ..தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.மேலும் தைத்திரிய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டார்.எனவே,அவர் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது அவனின் உத்தரவானது.


இந்நிலையில் பிரகலாதன் எனும் குழந்தை அவனுக்குப் பிறந்தது.அவன் ஓரளவு வளர்ந்ததும்,ஒரு ஆசிரியரை வைத்து,அவனுக்குக் கல்விப் புகட்ட உத்தரவிட்டான் கசிபு.கல்வியைத் தொடங்கும் போது விஷ்ணுவின் பெயரை சொல்லக் கூடாது என்றும்,ஹிரண்யன் பெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார்.


ஆனால், பிரகலாதன் அதற்கு இசையவில்லை.அவன் சாதாசர்வகாலமும் விஷ்ணூவின் பெயரையேசொல்லிக் கொண்டிருந்தான்.சில காலம் கழிந்ததும் மகனின் கல்வி வளர்ச்சி பற்றி அறிய கசிபு..குருவையும், பிரகலாதனையும் அழைத்தான்.


மகனின் கல்வியை சோதிக்க எண்ணி ஹிரண்யன்,"என்ன கற்றுக் கொண்டாய்  ? என்றான்.பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவரது பெருமைகளைச் சொல்லத் துவங்கினான்.


எல்லையில்லா கோபமுற்ற ஹிரண்யன், "யார் அந்த விஷ்ணு?" என்றான்.


பிரகலாதனோ, "தந்தையே! அந்த விஷ்ணு எங்கும் உள்ளார்.உங்களுள்ளும் உள்ளார்..என்னுள்ளும் உள்ளார்" என்றான்.


மேலும்  கோபம் அடைந்த ஹிரண்யன் தைத்திரிய சேனையைவிட்டு"இவனைக் கொன்றுவிடுங்கள்"என்றான்.அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன் படுத்தியும் ஒன்றும் நடைபெறவில்லை.ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்தனர்.ஏதும் நடக்கவில்லை.கைகளையும் , கால்களையும் கட்டி அரண்மனையின் கீழே வீசி எறிந்தனர்.அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை.இதையெல்லாம் கண்ட ஹிரண்யன் ,குருவினை அழைத்து, "இவனை மறுபடியும் அழைத்துச் சென்று நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள்"என்று அனுப்பினான்.


இம்முறை பிரகலாதனுக்கு ,சுக்ரநியதியின் படி எப்படி வெல்ல வேண்டும்என ஆசிரியர்கள் கற்பித்தனர்.பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிள்ளையை வரவழைத்த ஹிரண்யன் அவனிடம், "சுக்ரநியதியின்படி பகைவர்களை எப்படி வெல்வது?" என்றான்.


அதற்கு பிரகலாதன் "பகைவர்கள் என்று யாருமில்லை.எல்லாருள்ளும் விஷ்ணு உள்ளார்.அதனால்யாருமே பகைவர் இல்லை" என பதிலுரைத்தான்.கோபமடைந்த ஹிரண்யன்,பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து கடலுக்குள் போடச் சொன்னான்.அவன் மேலே வராது இருக்க மலையினை எடுத்து அவன் மீது போடுமாறு செய்தான்.அத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த வன், "மகனே! இத்தனை ஆபத்துகளையும் வெல்லக் கூடிய சக்தியினை எப்படிப் பெற்றாய்?" என்றான்.அதற்கு பிரகலாதன்,"தந்தையே!இதில் என் சக்தி ஏதுமில்லை.அனைத்தும் விஷ்ணுவுடையதே"என்று கூறினான்.


இந்நிலையில் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்ற விஷ்ணு, பிரகலாதனுக்கு மன்னனாக முடி சூட்டினார்.இப்பிரகலாதன் பரம்பரையில் வந்தவனே மகாபலி சக்கரவர்த்தி ஆவான்.


நரசிம்ம மூர்த்தி, பிரகலாதனைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்க, பிரகலாதனோ, "ஐயனே.. இமைப்பொழுதும் உம்மை  மறவாதிருக்க வேண்டும்"என்றான்."வேறு என்ன வேண்டும்?" என கேட்க, "என் தந்தையின் குற்றங்களை மன்னிக்க வேண்டும்"என வேண்டினான் பிரகலாதன்.விஷ்ணுவும் அப்படியே அருளினார். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11