பத்ம புராணம் - 6

 திவ்விய தேவியின் கதை

-----------------------------------

பிருகு முனிவரின் வழியில் சயவனன் என்ற முனிவன் தோன்றினார்.நிறைய ஞானத்தைப் பெற வேண்டும் என நினைத்தார்.அதைப் பெற சிறந்த வழி தீர்த்த யாத்திரை செல்வதுதான் என தீர்மானித்தார்.பல ஊர்களுக்குச் சென்று தீர்த்தங்களில் நீராடி விட்டு நர்மதை ஆற்றின் தென்கரையில் "அமரகந்தகா" என்ற ஊரின் எல்லையில் ஒரு ஆலமரத்தில் கீழ் அமர்ந்தார்.அப்போது ஆலமரத்தின் கிளைகளில் ஒரு கிளிக் குடும்பம் வசித்து வந்தது.ஆண் கிளியின் பெயர் குஞ்சலா.இக்கிளி,தன் மனைவி,நான்கு மகன் கிளிகளுடன் வசித்து வந்தது.பிள்ளைகளில் மூத்த கிளியாகிய "உஞ்வலா" காலை இரைத் தேடிச் சென்று இரையுடன் மாலை வரும்.அந்த உணவை மற்ற கிளிகள் பகிர்ந்து சாப்பிடும்.சயவன முனிவர் அங்கு தங்கியிருந்த நேரத்தில் மேலே உள்ள கிளிக்குடும்பத்தில் நடந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது.


 குஞ்சலா கிளி மகனிடம் கேட்டது.."இன்று எங்கே இரைத் தேடப் போனாய்?"


மூத்த மகன் கிளி சொல்லியது,"பிளக்க்ஷத்தீவு" என்ற பகுதிக்குத் தான் நான் இரைத் தேடிச் செல்வது வழக்கம்.அதை ஆள்கின்ற மன்னன் திவோதசா என்பவன் ஆவான்.அவனுக்கு திவ்யதேவி என்ற அழகானப் பெண் இருந்தாள்.அவளுக்குத் திருமணம் செய்ய  ரூபா நாட்டின் அரசன் சித்ரசேனனைத் தேர்ந்தெடுத்தார்கள்.திருமணம் நிச்சயிக்கப் பட்டு அதற்கான சடங்கும் நடந்தது.நடந்த சிலநாட்களில் சித்திரசேனன் இறந்து விட்டான்.அடுத்து ரூபசேனன் என்ற மன்னனை நிச்சயித்தார்கள்.திருமணத் தேதிக்குள் அவனும் இறந்தான்.இப்படியே 21 அரசர்கள் ஒருவர் பின் ஒருவராக நிச்சயம் செய்யப்பட அத்தனை பேரும் மடிந்தனர்.அச்சமடைந்த திவ்யதேவியின் தந்தை தனித்தனியாக நிச்சயம் செய்யாமல் ..பெண்ணுக்கு சுயம்வரம் என்ற ஒருநாளைக் குறிப்பிட்டார்கள்.பல அரசர்களும், அரச குமாரர்களும் வந்து கூடினர்.என்ன காரணத்தாலேயோ சுயம்வரம் தொடங்குமுன் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர்.அப்பா..அந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படி நடந்தது தெரியவில்லை..உங்களுக்குத் தெரியுமா?"


குஞ்சலா சொன்னது"அந்த ரகசியம் எனக்குத் தெரியும்.வாரணாசியில் சுதிரா என்றொரு வசியன் இருந்தான்.மிகவும் நல்லவனும், நல்வழியை நம்புபவனும் ஆன அவனுக்கு சித்ரா என்றொரு மனைவி இருந்தாள்.அவள் மிகவும் தீயவள்.யாருடனாவது தீய பேச்சுகளில் பேசிக் கொண்டிருப்பதும்..சமயம் வரும் போதெல்லாம் தன் கணவனை அவமானப் படுத்துவதும் அவளது பொழுதுபோக்காக இருந்தது.அவளின் கொடுமை தாங்காது சுதிரா மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான்.இதைப் பொறுக்காத சித்ரா வீட்டை விட்டு ஓடிக் கொலை,கொள்ளை,களவு முதலானவற்றைச் செய்யும் கூட்டத்தில் சேர்ந்து,அதன் தலைவியாகவும் ஆகி பலரையும் கொன்று திரிந்தாள்.காலம் வந்தபோது அவள் இறந்தாள்.அவள் ஆன்மா எமலோகம் சென்றது.பல தண்டனைகளை அனுபவித்தப் பிறகு பிளக்க்ஷத் தீவு மன்னனாகப் பிறந்தாள்.அவள் செய்த கொலைகள் காரணமாக இப்போது அவள் வாழ்க்கையை நாசப்படுத்த அவளுக்கு மணம் பேசப்பட்ட அத்தனை ராஜாக்களும் இறந்தார்கள்.


உஞ்சலா கேட்டது,"தந்தையே! எனக்கு ஒரு சந்தேகம்.இத்தனை கொலைகள் செய்து நரகவேதனையை அனுபவித்த அவள் ஒரு சாதாரணப் பிறப்பு எடுக்காது..மன்னன் மகளாக எப்படிப் பிறந்தாள்"


"மகனே! இத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும், ஒருநாள் இவள் வீடு தேடி வந்து உணவு கேட்ட ஒரு முனிவருக்கு, தான் செய்த தீமைகளை மறந்து விட்டு, அவரை உபசரித்து பாதபூஜை செய்து,அவருக்கு உணவும் அளித்தாள்.அந்தப் புண்ணியம்தான் அரசன் மகளாகப் பிறக்கச் செய்தது"


"அந்தப் பெண்ணுக்குத் தன் பாவங்களிலிருந்து வெளியேறி நற்கதியடைய வழி உண்டா..என்பதைச் சொல்லுங்கள்"


"அவள் எல்லாவற்றையும் துறந்து, காட்டுக்குச் சென்று விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றினால் அவள் உய்கதி அடையமுடியும்.அவளிடம் அன்பு வைத்திருக்கும் நீ நாளை அங்குச் செல்லும் போது அவளைக் கண்டு இதைச் சொல்லு" என்றது தந்தைக் கிளி.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11