பத்ம புராணம் - 7

நிறம் மாறிய அன்னங்கள்

---------------------------------

ஆலமரத்தில் குடியிருந்த கிளிக் குடும்பத்தின் தலைவன் குஞ்சலா தனது இரண்டாவது மகனாகிய சமுஜ்வலாவிடம் பேசத் தொடங்கியது..

"சமுஜ்வலா..நீ இரைத் தேடிப் போகும் பக்கம் ஏதேனும் விசேஷம் உண்டா?"


"வடதிசையில் இமயத்தில் இருக்கும் மானசரோவர் என்ற ஏரிக்குத்தான் இரை தேடச் செல்கிறேன்.ஒருமுறை நான் அங்கு இருந்தபொழுது முழுவதும் கருநிறம் உடைய ஒரு பெரிய அன்னப் பறவையும் அதன் பின்னர் அதே நிறம் பொருந்திய பல அன்னங்களும் மானசரோவருக்கு வந்தன.சற்று நேரத்தில் உடல் முழுதும் வெள்ளையும், மூக்கும்,காலும் கருப்பாக உள்ள சில அன்னங்களும் வந்து சேர்ந்தன.இந்தப் பறவைகள் எல்லாம் நீரில் நீந்தி விளையாடிய பொழுது மிகப் பெரிய ஒரு ராஜ அன்னமும்,துணை அன்னங்களும் மானசரோவர்  உள்ளிருந்து புறப்பட்டு வெளியே பறந்து சென்று விட்டன.சற்று நேரத்தில் பேய் வடிவுடைய நான்கு பெண் பூதங்கள் மானசரோவர் கரைக்கு வந்து மிகப் பெரிய குரலுடன் ஓலமிட்டுக் கொண்டே இருந்தன.இதைப் பார்த்த எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.இது பற்றி நீங்கள் ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?"என்றது  சமுஜ்வலா


தந்தை சொன்னது, "மகனே, அந்த ரகசியத்தை நான் அறிவேன்.சொல்கிறேன் கேள்...ஒருமுறை நாரதர் இந்திரலோகம் சென்றார்.இந்திரன் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, "நீண்ட நாட்கள்" உங்களைக் காணவில்லையே!"என்றான்.நாரதரும் "நான் தீர்த்தயாத்திரை சென்றிருந்தேன்" என்றார்.உடன் இந்திரன்'எல்லா தீர்த்தங்களையும் பார்த்தீர்களே! அவற்றில் மிக உயர்ந்தது எது? என்று சொல்ல முடியுமா?"எனக் கேட்க.."அனைத்திலும் உயர்ந்தது என்று தனித்து எதையும் கூற முடியாது"என்றார் நாரதர்.


அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்திரன் விரும்பியதால்,அனைத்துத் தீர்த்தங்களையும் தன்னிடம் வருமாறு இந்திரன் ஆணையிட்டான்.இந்திர சபையில், கங்கை,கோதாவரி,நர்மதா,சரஸ்வதி,புண்யா,காவேரி ஆகிய 58 தீர்த்தங்களும், தலைவியாகிய பெண்களும்,பிரயாகை,வாரணாசி,அவந்தி,புஷ்கரா,மதுரா முதலிய பத்து நகரங்களின் தலைவிகளும் வந்து நின்றனர்.இந்திரன் அவர்களைப் பார்த்து பெண் கொலை,சிசுக்கொலை,பிராமணக கொலை,பசுக்கொலை முதலிய பெரும் பாவங்களைச் செய்தவர்களுள் உங்களில் யாரிடம் வந்தால் அனைத்துப் பாவங்களையும் தீர்க்க முடியும? என்றான்.அவர்கள்"இத்தனையும் தீர்க்கும் ஒரே தீர்த்தத்தையோ,ஒரே நகரையோ எங்களால் குறிப்பிட்டுக் காட்ட முடியாது.ஒன்றை மட்டும் சொல்ல முடியும்.மிகவும் தெய்வீகமானது என்று சொல்லக் கூடிய பிரயாகை,புஷ்கரா,அர்க்ய தீர்த்தா,வாரணாசி என்பதாகும்"  


இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஒரு கதையும் உண்டு.பாஞ்சால நாட்டில் வாழ்ந்த விதுரன் மிகவும் கோபத்துடன் ஒரு பிராமணனைக் கொன்றான்.அதன்பிறகு தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளத் தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.போகும் வழியில் தன் ஆசிரியரைக் கொன்ற சந்திரசர்மா என்பவனைச் சந்தித்து இருவருமாக யாத்திரையினைத் தொடங்கினர்.மணம் செய்துக் கொள்ளக் கூடாத பெண்ணை மணம் செய்து கொண்ட வேதசர்மா என்பவனும் இந்த இருவருடனும் சேர்ந்து கொண்டான்.வஞ்சலா என்ற குடிகாரனும் இம்மூவருடன்..நால்வராக தங்கள் பாவம்  தீர்க்கும் தீர்த்தம் நாடிச் சென்றனர்..வழியில் ஒரு முனிவரை சந்தித்து தங்கள் கதையைச் சொல்லி..எங்கு நீராடினால் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று கேட்டனர்.


அவர், பிரயாகை,புஷ்கரா,அர்க்யதீர்த்தா,வாரணாசி  ஆகிய நான்குஇடங்களுக்குச் சென்றால் பாவங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.அவர்களும் அவர் சொன்ன இடங்களுக்குச் சென்று நீராடினர்.ஆனால்அவர்கள் பாவம் போகவில்லை.ஆனால்..இவர்கள் பாவம் காரணமாக அந்நான்கு இடங்களும் தூய்மையை இழந்தன.இந்த நான்கு தீர்த்தங்களும் கறுப்பு அன்னமாக உருவெடுத்து,இந்த நான்கு பாவிகளைப் பின் தொடர்ந்தன.இந்த நால்வரும் எங்கெங்கு சென்ரு குளித்தனரோ..அந்தத் தீர்த்தங்கள் எல்லாம் பாழ்பட்டுக் கறுப்பு அன்னங்களாக மாறி இவர்களைப் பின் தொடர்ந்தன.இவர்கள் நீராடாதத் தீர்த்தங்களும் என்ன நடக்கிறது என்பதை அறிய தாங்களும் அன்னங்களாக மாறிப் பின் தொடர்ந்தன.இந்த முறையில் 64 தீர்த்தங்களும்      கறுப்பு,வெள்ளையுமான 64 அன்னங்களாக இந்த நால்வரைத் தொடர்ந்தன.


இறுதியாக இந்த நால்வரும் மிகப் புனிதமான மானசரோவர் நதியில் குளிக்க மானசரோவரும் தூய்மை கெட்டு அதுவும் ஒரு கரிய மிகப் பெரிய அன்னப்பறவையாக  உருவாகியது.இறுதியாக இந்நான்கு  பாவிகளும் நர்மதா நதியும்,ரேவா நதியும் சங்கமம் ஆகின்ற இடத்தில் குளித்தனர்.உடன் அவர்கள் பாவங்கள் அவர்களை விட்டு நீங்கின.இதைப் பார்த்த கறுப்பு அன்ன வடிவில் இருந்த ஏனைய தீர்த்தங்களும் அங்குக் குளித்தவுடன் தூய்மையான நிறம் பெற்றன.மானசரோவரில் நின்று அழுதுக் கொண்டிருந்த நான்கு பெண் பூதங்களும் இங்குக் குளித்து பாவங்கள் நீங்கி இறந்தனர்.இந்த இடம் "குப்ஜ தீர்த்தம்" என்று அழைக்கப் படுகிறது" என்று சொன்ன தந்தைக் கிளி மேலும் சொன்னது,"மகனே..இப்போது நீ பார்த்த காட்சி என்ன என அறிந்திருப்பாய்.இது ஒரு உருவகக் கதை என்பதை நீ அறிய வேண்டும்"என்று தந்தைக் கிளி கூறி முடித்தது. 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11