விஷ்ணு புராணம் - 9

 யாக்ஞவல்கியர் கதை

-------------------------------

ஒரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர்.பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருந்ததால் ,அனைவரும் அக்கூட்டத்திற்கு வர வேண்டும்,அப்படி யாராவது வராமல் இருந்து விட்டால்..எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சென்றடையும் என ரிஷிகள் அறிவித்தனர்.


என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷியால் இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை.யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜூர் வேதத்தை இருபத்தேழு பங்குகளாகப் பிரித்து அவர் கற்றுத் தந்தி ருந்தார்.கூட்டத்திற்கு வராததால் எட்டாம் நாள் வைசம்பாயனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலையில் காலை வைத்து அவரைக் கொன்று விட்டிருந்தார்.இந்த பிரம்மஹத்தித் தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து ,இந்த தோஷம் தன்னை விட்டு அகல வேண்டுமானால் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியும் சொன்னார்.  


இதைக் கேட்டதும் அந்த இருபத்தியேழு பேரில் ஒருவரான யாக்ஞவல்கியர் எழுந்து "யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது.நான் ஒருவனே இந்த யாகத்தை செய்து முடிக்கிறேன்"என்றார்.


இது கேட்ட வைசம்பாயனர் மிகவும் கோபமடைந்து,"எனது மற்ற சீடர்களை நீ எவ்வாறு குறை சொல்லலாம்?இப்படி அகங்காரம் உள்ள நீ என் சீடனாக இருப்பதற்குத் தகுதியில்லை.ஆகவே என்னிடம் கற்றுக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்து விடு" என்றார்.


யாக்ஞவல்கியர், "சுவாமி.. உங்களது நன்மைக்குத்தான் நான் இப்படிக் கூறினேன்.இதைப் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை.அதற்காக நீங்கள் என் மீது சினம் கொண்டீர்கள்.சொல்வதை புரிந்து கொள்ளாத குரு எனக்கும் தேவையில்லை.ஆகவே  உங்களிடம் கற்றுக் கொண்டதை இதோ உமிழ்ந்து விடுகிறேன்"என்று கூறி உமிழ்ந்தார்.


அவர் உமிழ்ந்ததை ஏனைய சீடர்கள் தைத்திரப் பறவை வடிவுடன் வந்து உண்டு விட்டார்கள்.அதனால் யஜூர் வேதத்துக்கு மட்டும் "தைத்திரிய சம்ஹிதை"ஏன்று பெயர் வழங்கலாயிற்று.


யஜூர் வேதத்தை இழந்து விட்ட யாக்ஞவல்கியர் சூரியனைத் தன் குருவாகக் கொண்டு தவம் செய்தார்.அதன் பயனாக சூரியன் தோன்றி யாக்ஞவல்கியருக்கு யஜூர் வேதத்தைக் கற்றுத் தந்தார்.சூரியனே கற்றுக் கொடுத்ததால் வைசம்பாயனருக்குக் கூடத் தெரியாத பல அர்த்தங்கள் யாக்ஞவல்கியருக்கு தெரியலாயின.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11