விஷ்ணு புராணம் - 10

 புராணங்கள் தோன்றிய கதை

------------------------------------

விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியில் இந்தப் புராணமும் ,ஏனைய புராணங்களும் தோன்றிய வரிசை சொல்லப் படுகிறது.புராண சம்ஹிதை என்ற மூல நூலை வேதவியாசர் தன் மாணவனாகிய லோபஹர்ஷனுக்குக் கற்றுக் கொடுத்தார்.லோபஹர்ஷனிடம் பயின்ற , சுமதி,அக்னிவர்சா,மைத்ரேயி,சவர்னி,அக்ரிதவர்னா,சம்சவியனா ஆகிய ஆறு சீடர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட புராண சம்ஹிதையிலிருந்து ஒவ்வொரு புராணத்தை விரிவாக சொல்லினர்.


இந்த அடிப்படையில் தான் விஷ்ணு புராணமும் சொல்லப்பட்டது.பத்ம புராணத்தை அடுத்து வருகிற விஷ்ணு புராணம், விஷ்ணுவின் சிறப்புகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது.இப்புராணத்தின்படி ஞானம் பதினான்கு வகைப்படும்.அவை நான்கு வேதங்கள்,ஆறு வேத அங்கங்கள்,மீமாம்சை,நியாயம்,புராணம்,தர்மசாத்திரம் ஆகியவை ஆகும்.இந்த பதினான்கோடு, ஆயுர்வேதம்,தனுர் வேதம்,சங்கீதம்,அர்த்த சாஸ்திரம் ஆகிய நான்கையும் சேர்த்து பேசுவதுண்டு.ரிஷிகளுள் பிரம்ம ரிஷிகள்,தேவ ரிஷிகள்,ராஜ ரிஷிகள் என்று மூன்று வகையினர் உண் டு. 


யமன் கதை 

------------------

உலகத்தில் இறந்தவர்களையெல்லாம் கொண்டு வந்து அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப,நரகத்தில் தள்ளி,அக்குற்றங்களுக்கு தண்டனையை அவர்கள் அனுபவிப்பதோடு, மறுபிறப்பை அவர்களுக்குச் சொல்லுதல் யமனுடைய வேலை.இப்படிப்பட்ட நரகவேதனையை அனுபவிக்காமல் இருக்கவும்,யமனிடம் போகாமல் இருக்கவும் வழி உண்டா என்று மைத்ரேயி,பராசரனைக் கேட்க,தான் இது குறித்துக் கேட்ட உரையாடலை பராசரன் கூறினார்.


பாண்டவர்களில் ஒருவனாகிய நகுலன், தாத்தாவாகிய பீஷ்மரைப் பார்த்து  இதே கேள்வியைக் கேட்டான்.அதற்கு பீஷ்மர் நகுலனைப் பார்த்துக் கூறினார்..


"கலிங்க நாட்டில் எனக்கு அந்தண நண்பர் ஒருவர் இருந்தார்.அவருக்கு ஒரு முனிவர் நண்பராக இருந்தார்.அந்த முனிவர் இறந்த காலத்தையும்,பழம் பிறப்பையும் அறியும் ஆற்றல் பெற்றவர்.இந்த சக்தியின் துணை கொண்டு யமனுக்கும், ஒரு யம தூதனுக்கும் நடந்த உரையாடலை அந்த முனிவர் அறிந்திருந்தார்.தாம் அறிந்ததை  அம்முனிவர் தன் அந்தண நண்பருக்குக் கூற அவர் எனக்கு சொன்னார்.அதை உனக்கு இப்போது நான் சொல்கிறேன்.அந்த உரையாடல்..


யமன்..தன் தூதனிடம் கூறுகின்றான் -விஷ்ணு பக்தர்கள் பக்கம் போகாதே.என்னைப் பொறுத்தவரை  விஷ்ணு பக்தர்களைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் நான்தான் தலைவன்.உண்மையில் நான் சுதந்திரமானவன் அல்ல.நான் செய்யும் பணிகளை விஷ்ணுவே மேற்பார்வையிடுகிறார்.அது மட்டுமின்றி என்னை தண்டிக்கும் உரிமையும் உடையவர் அவராவார்.விஷ்ணுவின் பாதங்களை வணங்கும் பக்தர்களிடம் செல்லாதே!


ஏம தூதன் - ஒருவன் எப்படி விஷ்ணு பக்தனாக ஆவது?


எமன்- அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மத்தை யார் மீறுவதில்லையோ..யாருடைய மனதில் அகங்காரம்,பொறாமை இல்லையோ..யார் பகைவர்-நண்பர் என வேறுபாடு பாராட்டாமல் அனைவருக்கும் சமத்துவமாக இருக்கிறார்களோ...யார் அஹிம்சையை கடைப்பிடிக்கிறார்களோ..அவர்களே விஷ்ணு பக்தர்கள் ஆவார்கள்.


ஓயாது விஷ்ணுவை தியானிப்பதால் அவர்கள் வனப்பு வாய்ந்த வடிவத்தைப் பெறுகிறார்கள்.இதயத்தில் விஷ்ணுவை வைத்து பூஜிப்பவர்கள் குற்றம் செய்வதில்லை.அத்தகை  பக்தர்கள் பக்கம் செல்லாதே!  அப்படிச் சென்றால் வலிமை பொருந்திய விஷ்ணூவின் சக்கரம் உன்னையும், என்னையும் பழி தீர்த்துவிடும்

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11