விஷ்ணு புராணம் - 17

 சயமந்தக மணியின் கதை

--------------------------------------


சத்தியபாமாவின் தந்தையாகிய சத்ரஜித் கடற்கரையில் இருந்து கொண்டு சூரியனை பிரார்த்தித்தான்.ஆழ்ந்த அந்த பிரார்த்தனையில் மகிழ்ந்த சூரியன் சத்ரஜித் முன் தோன்றினான்.அவன் கண்களைத் திறந்தாலும்,சூரியனின் ஒளியால் கண்கள் மீண்டும் மூடியது.அவன் சூரியனைப் பார்த்து, "ஐயனே! உங்கள் கழுத்தில் ஏதோ ஒளி பொருந்தியதை அணிந்துள்ளீர்கள்.அந்த ஒளியின் காரணமாகவே என்னால் உங்களை தரிசிக்க முடியவில்லை.உம்மை தரிசிக்க அருள் புரிய வேண்டும்" என வேண்டினான்.


உடனே சூரியன் தன்கழுத்தில் இருந்த சயமந்தக மணியைக் கழட்டிவிட்டான்.இப்போது சூரியனைக் கண்டு மகிழ்ந்த சத்ரஜித் அவரைத் துதித்தான்.சூரியனும் "உனக்கு என்ன வேண்டுமோ..அதனைக் கேள்" என்றான்.சத்ரஜித், "உங்களது சயமந்தக மணியை எனக்குத் தர வேண்டும்" என்றான்..சூரியனும் ஏதும் பேசாது  அம்மாலையைக் கழட்டிக் கொடுத்து விட்டான்.அதை அணிந்து கொண்டு சத்ரஜித் துவாரகையில் நுழைந்தான்.அவன் போட்டிருந்த மாலையின் காரணமாக மிகப் பெரிய ஒளி வீசியது.மக்கள் அவனை சூரியன் என்றே எண்ணி விட்டனர்.


வீட்டிற்கு கொண்டு வந்து அந்த மணியை ஜாக்கிரதையாக ஒளித்து வைத்தான்.அந்த மணி ஊருக்குள் வந்த காரணத்தால்..துவாரகையில் எந்தத் தீமையும் ஏற்படாமல் மக்கள் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர்.


சத்ரஜித் தன்னிடம் இருந்த அந்த மணியை,தன் மருமகனாகிய கிருஷ்ணன் உக்ரசேனருக்குக் கொடுக்க விரும்புவதை அறிந்து ,தன் சகோதரனாகிய பிரசேனனிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னான்.


அந்த மணியின் சிறப்பு என்னவெனில்..அது நல்லவர்கள் கையில் இருந்தால் நாட்டிற்கும் நல்லது உண்டாகி..தினமும் ஒரு பொற்காசும் தரும்.சத்ரஜித் நல்லவனாக இருந்ததால்..அந்த மணி அவனுக்கும், நாட்டிற்கும் நல்லது செய்தது.மணியை வைத்திருந்த பிரசேனன் அதை அணிந்து கொண்டு காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான்.அவன் நல்லவனல்ல.காட்டில் ஒரு சிங்கம் அவனைக் கொன்றது. பின் அந்த மணியை சிங்கம் எடுத்துச் செல்ல எண்ணுகையில், கரடிகளில் உயர்ந்தவனாகிய ஜாம்பவான் ,சிங்கத்தைக் கொன்று அந்த மணியை எடுத்துச் சென்று தன் குழந்தையிடம் விளையாடக்  கொடுத்தது.


காட்டிற்குச் சென்ற பிரசேனன் நீண்ட னேரம் திரும்பாததால்..அவன் இறந்து விட்டான் என முடிவு செய்து விட்டனர்.கிருஷ்ணனே அவ்னைக் கொன்று அந்த மணியை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும் என பலரும் எண்ணினர்.


இப்பிரச்னைக்கு முடிவு கட்ட எண்ணிய கிருஷ்ணன்,பிரசேனனைத் தேடி காட்டிற்குள் சென்றான்.அங்கு இறந்து கிடந்த பிரசேனனையும், சிங்கத்தின் உடல்களைக் கண்டான்.நடந்ததை ஒருவாறு ஊகித்துக் கொண்டவன்..ஜாம்பவானின் கால் தடங்களைப் பார்த்து அதனைத் தொடர்ந்து சென்று ஜாம்பவான் இருப்பிடத்தை அறிந்தான்.அங்கு ஜாம்பவானின் குழந்தை மணியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது.கிருஷ்ணனைக் கண்டது அக்குழ்ந்தை அலற..ஜாம்பவான் வெளியே வர கிருஷ்ணனுக்கும், ஜாம்பவானுக்கும் போர் மூண்டது.இப்போர் இருபத்தொரு நாட்கள் நடந்தது.  கிருஷ்ணனைக் கானாத யாதவர்கள் அவனைத் தேடி ஜாம்பவான் வீடு வரை வந்தனர்.பின் கிருஷ்ணனைப் பற்றி ஏதும் தெரியாததால் அவன் இறந்து விட்டதாக எண்ணி திரும்பினர்.பின்னர் கிருஷ்ணனுக்கு ஸ்ரார்த்த சடங்குகள் செய்தனர்.அதனால் ஏற்பட்ட புண்ணியம் கிருஷ்ணனை சென்றடைய..அதனால் மேலும் பலம் பெற்ற கிருஷ்ணன் ஜாம்பவானை போரில் தோற்கடித்தான். தன் தோல்வியை ஒப்புக் கொண்ட ஜாம்பவான் தன் மகள் சாம்பவதியை அவனுக்கு மணம் முடித்ததோடு..மணியையும் அவனுக்கு அளித்தான்.பின் கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பினான்.


கிருஷ்ணன் வந்ததைக் கண்ட யாதவர்கள் மகிழ்ந்தனர்.நடந்ததை அறிந்த சத்ரஜித் வருந்தினான்.பின் தன் மகள் சத்யபாமையை அவனுக்கு மணம் செய்வித்தான். சயமந்தகமணி மீண்டும் சர்ஜித்தை அடைந்தது.சத்யபாமையை தாங்கள் அடைய வேண்டும் என எண்ணியிருந்த அக்ரூவர்,கிருதவர்மா மற்றும் சடதன்வா ஆகியோர் கிருஷ்ணன் மீது பொறாமையும், வெறுப்பும் அடைந்தனர்.


இந்நிலையில் பாண்டவர்கள் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிந்து போனார்கள் என்பதைக் கேட்டகிருஷ்ணன் அங்கு சென்றான்.கிருஷ்ணன் இல்லாத நேரத்தைப் பயன் படுத்திக் கொண்டு சடதன்வா ,சத்ரஜித்தைக் கொன்று மணியைக் களவாடிச் சென்று விட்டான்.


தன் தகப்பன் கொல்லப்பட்டதை அறிந்த சத்யபாமை கோபத்துடன் ஒரு ரதத்தில் ஏறி வாரணாவதம் சென்று கிருஷ்ணனிடம் நடந்ததையெல்லாம் முறையிட்டாள். கிருஷ்ணன் ,பலராமனுடன் சேர்ந்து சடதன்வாவை எதிர்த்தான்.இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாத சடதன்வா,அக்ரூவரிடம் மணியைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான்.தன்னிடம் மணி இருப்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என்ற உறுதியினை பெற்றுக் கொண்ட அக்ரூவர் மணியை வைத்துக் கொண்டான்.சடதன்வா ,கிருஷ்ணனுக்கு பயந்து ஒரு குதிரையில் ஏறி தப்பித்தான்.கிருஷணனும், பலராமனும் அவனைத் தொடர்ந்தனர்.காட்டின் ஒரு இடத்தில் குதிரை இறந்து விட.. சடதன்வா ஓடத் தொடங்கினான்.கிருஷ்ணனும், பலராமனை ஒரு இடத்தில் இருக்கச் சொல்லி விட்டு சடதன்வாவைத் துரத்தினான்.சடதன்யாவின் தலையை சீவி விட்டான் கிருஷ்ணன்.அவனிடம் தேடிப் பார்த்து மணி இல்லாததைக் கண்ட கிருஷ்ணன்..பலராமனிடம் வந்து நடந்ததைக் கூறினான்.ஆனால் பலராமனோ, கிருஷ்ணனிடம், "உன் வார்த்தையை நான் நம்ப மாட்டேன்.இனி நீ யாரோ..நான் யாரோ.."என்று கூறிவிட்டு  விதேக நாட்டிற்கு சென்று அங்கு ஜனகனின் விருந்தினனாக இருந்தான்.அங்கு வந்த துரியோதனன் பலராமனிடம் கதாயுதப் போர் முறையைக் கற்றுக் கொண்டான். 


இதனிடையே துவாரகையில் யாதவர்கள் கிருஷ்ணனிடம் மணி இல்லை என்பதை அறிந்து கொண்டு..பலராமனிடம் சென்று அதைச் சொல்லி அவனை சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தனர்.அக்ரூவரொ, தன்னிடம் மணி இருப்பதை அறிந்து, கிருஷ்ணன் தன்னைக் கொன்றுவிடுவானோ? என் அபயந்தான்.அதனால் பல யாகங்களைச் செய்யத் தொடங்கினான்.எத்தகைய பகைவனானாலும், யாகம் செய்கையில் அவனைக் கொல்ல்க கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.


அக்ரூவரிடம் மணி இருந்ததால் துவாரகை செழிப்பாக இருந்தது.யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதால் ஒரு சிலர் துவாரகையை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.அக்றுவரும் அவர்களுடன் சென்று விட்டான். மணி துவாரகையை விட்டுப் போய் விட்டதால், விலங்குகளும், பஞ்சமும் துவாரகியயில் புகுந்து விட்டன.இதை அறிந்த யாதவர்கள் அக்ரூவரை திரும்ப  துவாரகைக்கு அழைத்து வந்தனர்.நாடு மறுபடியும் செழிப்பு அடைந்தது.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் யாதவர்கள் அனைவரையும் அழைத்து அக்ரூவரைப் பார்த்து பேசலானான்.


"அக்ரூவரே!உங்களிடம் மணி இருப்பதால் நாடு செழிப்பாக உள்ளது.எனக்கு மணி தேவையில்லை.நல்லவனாகிய உங்களிடம் அது இருப்பதுதான் சிறந்தது.ஆனால் பலராமன் என் மீது சந்தேகப்படுகிறான்.அவன் சந்தேகம் நீங்க நீங்கள் உங்களிடம் உள்ள மணியை அனைவரிடமும் காட்டுங்கள்" என்றான்.வேறு வழியின்றி அக்ரூவர் மணியைக் காட்டினான்.பலராமன் அதைத் தான் எடுத்துக் கொள்ள விரும்பினான்.தன் தந்தையான சத்ரஜித் தான் அந்த மணிக்கு சொந்தக்காரர் என்பதால் அது தனக்கே வேண்டும் என்றாள் சத்யபாமை.


இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க கிருஷ்ணன் விரும்பினான்."இந்த மணி நல்லவனிடம் இருந்தால் எல்லோரும் நன்மை அடைவார்கள்.அல்லாதவர் கைகளுக்குப் போனால் எல்லோருக்கும் கெடுதலே.பல்லாயிரம் பெண்களை மணந்த நான் நல்லவன் இல்லை.என் மனைவி சத்யபாமைக்கும் இது பொருந்தும்.நாள் முழுதும் குடித்துக் கொண்டே இருக்கும் பலராமனும் நல்லவன் இல்லை.ஆகவே இந்த மணி அக்ரூவரிடம் இருப்பதே நன்மை பயக்கும்.அவனே இதனை வைத்துக் கொள்ளட்டும்" என சொல்லி அனைவரையும் ஒப்புக் கொள்ள வைத்தான்.  

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11