விஷ்ணு புராணம் - 19

 காளிங்க நர்த்தனம்

------------------------


காளிங்க நர்த்தனம் கதையை விஷ்ணு புராணம் வேறு மாதிரி சொல்கிறது.முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு..கடலை விட்டு விட்டு யமுனையில் குடியிருந்தது.யமுனையின் ஒரு பகுதியில் காளிங்கனும்,அதன் குடும்பமும்,உறவினர்களும் ஒரு மடுவில் வசித்து வந்தனர்.யமுனையின் அப்பகுதி நீர் மட்டும் முழுதும் விஷமாக மாறிவிட்டது.இந்நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான்.காளிங்கனும், மற்ற பாம்புகளும் கிருஷ்ணனின் உடலை சுற்றிக் கொண்டு அவனை கடிக்கத் தொடங்கின.நந்தன்,யசோதை, பலராமான் ஆகியோர் இதைப் பார்த்து "கிருஷ்ணா..விளையாடியது போதும்..விரைவில் அவற்றை அழித்து விட்டு வா" என்றனர்.


உடன் கிருஷ்ணன் எல்லா பாம்புகளையும் அழித்து..காளிங்கனின் தலையில் ஏறி நடனமாடி, அதன் உயிர் போகும் நிலைக்குக் கொண்டு வந்தான்.காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொள்ள, கிருஷ்ணன் அவர்களை மன்னித்து,"இனியும் யமுனையில் நீங்கள் தங்கக் கூடாது.கடலுக்கு சென்று விடுங்கள்"என ஆணையிட்டான்.


கிருஷ்ணன் காளிங்கனின் படத்தின் மேல் ஆடியதால், அந்த பாதத்தின் சின்னம் எல்லா நாகங்கள் படத்தின் மீதும் அமைந்து விட்டதாம்.அதைப் பார்த்த கருடன் அவற்றை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டதாம்.   


பாகவதம் முதலியவற்றில் கன்றுக்குட்டி வடிவில் கண்ணனைக் கொல்ல வந்த அசுரனை அக்கன்றின் கால்களைப் பிடித்து சுற்றி விளாமரத்தின் மீது எறிந்து விளாங்கனிகளை உதிர்த்தான் என்று கூறப்படுகிறது.அந்தக் கதை விஷ்ணு புராணத்தில் சில மாற்றங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.தேனுகா என்ற அசுரன் கழுதை வடிவு கொண்டு விளாங்கனிகளைக் காவல் செய்தான் என்று வேறுபாட்டுடன் சொல்லப்பட்டுள்ளது.


கிருஷ்ணனும், பலராமனும் அவர்கள் நண்பர்களுடன் ஓட்டப் பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பந்தயத்தில் தோற்றவர் வென்றவரைத் தோளில் தூக்கி செல்ல வேண்டும் என்பது பந்தயம்.பிரலப்பா என்ற அசுரன் கிருஷ்ணன், பலராமன் இருவரையும் கொல்லும் எண்ணத்துடன் ஆயர்பாடி சிறுவர்களைப் போள அவர்களுடன் விளையாடினான்.ஓட்டப்பந்தயத்தில் தோற்றதால் பலராமனை முதுகில் தூக்கிக் கொண்டு ஓடப் புறப்பட்டான்.திடீரென அசுர வடிவத்தியப் பெற்று மலை போன்ற மேனியுடன் பலராமனைத் தூக்கிச் சென்றான்.என்ன செய்வது என்று தெரியாத பலராமனைப் பார்த்து கிருஷ்ணன்"உன் சக்தியை உபயோகித்து அவனைக் கொன்று விடு" என்றான்.கிருஷ்ணனின் அறிவுரைப்படி உள்ளங்கையை மடக்கி..அசுரன் தலையில் குத்து விட்டு அவனை சாக அடித்தான் பலராமன்.


இதற்கு அடுத்தபடியாக கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த கதையை விஷ்ணு புராணம் சொல்கிறது.இப்பகுதியில் சில புதுமைகள் கூறப்படுகின்றன.அவை, மழை ஓய்ந்த பிறகு கிருஷ்ணன் கோவர்த்தன கிரியை அதன் இருப்பிடத்திலேயே வைத்து விட்டான்.கிருஷ்ணனை வந்து வணங்கிய இந்திரன்,"கோக்களாகிய பசுக்களை ஏழு நாட்கள் நீ காத்ததால் இனி "கோவிந்தன்" என்ற பெயரும் உனக்கு ஏற்புடையதாகும்.என்னுடைய மகன் அர்ஜுனன் என்ற பெயரில் பூவுலகில் பிறந்துள்ளான்.அவனை காக்க வேண்டியது உன் பொறுப்பாகும்"என்றான்.கிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.


கிருஷ்ண லீலைகள் மேலும் பலவற்றைப் பற்றி விஷ்ணு புராணம் விரிவாகப் பேசுகிறதுஅவற்றில் சில வருமாறு..


அரிஷ்டா என்ற அசுரன் மிகப் பெரிய பாய்ச்சலுடன் காளை வடிவு கொண்டு, கோகுலத்தில் புகுந்து பல அட்டூழியங்களைச் செய்தான்.மிக உயரமான அந்த எருதை அடக்க யாரும் வரவில்லை.கிருஷ்ணன் கைகளைத் தட்டி..அந்த எருதை தன்புறமாக வரவழைத்து..அதன் கொம்பைஉடைத்து..அதன் உடலினையும் பிளந்தான்.


கேசி என்ற அசுரன் மிகப் பெரிய குதிரை வடிவம் கொண்டு விண்ணையும், மண்ணையும் சாடுகின்ற அளவில் கோகுலத்தில் நுழைந்தான்.கிருஷ்ணன் அவன் வாய்க்குள் கையை விட்டு ஒவ்வொரு பல்லாக உதிர்த்து கேசியை அழித்தான்.அதனால் கிருஷ்ணனுக்கு கேசவன் என்ற பெயர் வந்தது. 


இவற்றையெல்லம் அறிந்த கம்சன் சனுரா,மிஷ்டிகா என்ற இரண்டு மல்லர்களைத் தயார் செய்து கிருஷ்ண,பலராமனைக் கொல்ல முடிவு செய்தான்.அது வெளியே தெரியாது இருக்க யாகம் செய்வதாக எல்லோருக்கும் சொல்லி,அக்ரூவர் மூலம் கிருஷ்ண, பலராமனை மதுரைக்கு வரவழைத்தான்.கிருஷ்ணனும், பலராமனும் இரண்டு மல்லர்களையும் சாகடித்ததுடன் "குவாலய பீடம்" என்ற கம்சனின் யானையின் கொம்புகளை உடைத்து கொன்று விட்டனர்.


மதுரையில் நுழைந்த அவர்கள்,கம்சனின் சலவைத் தொழிலாளரைக் கொன்று அவரிடமிருந்த சிறந்த உடைகளை அணிந்து கொண்டனர்.பின்னர் கம்சனுக்கு வாசனைச் சந்தனம் அளிக்கும் கூன் விழுந்த பெண்ணின் கூனை நிமர்த்தியதுடன்,மல்லர்களை முறியடித்தான்.கிருஷ்ணன் மேடையின் மீதேறி கம்சனின் முடியைப் பிடித்து உலுக்கி கையால் அவனைக் குத்திக் கொன்று விட்டான்.இறந்த கம்சனின் உடலை அந்த விளையாட்டு அரங்கிலேயே புதைத்தனர்.கம்சன் இறந்த பின்னர்,அவனால் சிறையிடப்பட்டிருந்த அவனது தந்தை உக்கிரசேனன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான்.


கம்சவதம் முடிந்ததும் பலராமனும், கிருஷ்ணனும் சாந்தீபன் என்ற முனிவனிடம் கல்வி கற்கச் சென்றனர்.பல ஆண்டுகள் கற்க வேண்டியதை 64 நாட்களில் கற்றனர்.அவர்கள் அதற்கான குருதட்சணையாக சாந்திபனுக்குப் பல காலத்திற்கு முன்னர் இறந்து போன அவருடைய மகனை மீட்க கடலின் அடியில் பஞ்சஜன்யன் என்ற அசுரனை வென்று பாஞ்சஜன்யம் என்ற சங்கினைக் கண்ணன் பெற்றான்.


கம்சன்,ஜராசந்தன் என்ற மன்னனின் அஸ்டி.பிரட்டி என்ற இரண்டு மகள்களை  மணந்திருந்தான்.மருமகன் கொல்லப்பட்டதை அறிந்த ஜராசந்தன் பெரும் படையுடன் மதுராவை எதிர்த்தான்.கிருஷ்ணனுக்கு,தேவருலகிலிருந்து இரண்டு தேர்களும்,சாரங்கம் என்ற வில்லும்,"கௌமேதி" என்ற ஒரு ஆயுதமும்,எடுக்க எடுக்க குறையாத துணிகளும் வந்து சேர்ந்தன.இவற்றை வைத்துக் கொண்டு சகோதரர்கள் இருவரும் ஜராசந்தனை தோற்கடித்தனர்.இதுபோல ஜராசந்தன் 18 முறை படையெடுத்து பதினெட்டு முறைகளும் தோற்றுப் போனான்.


கார்க்கியா என்ற அந்தணன் யாதவர்களால் மிகவும் அவமானப்படுத்தப் பட்டான்.தென் கடற்கரைக்குச் சென்று12 ஆண்டுகள் இரும்புத் துகள்களைத் தின்று தவம் புரிந்தான்.தவத்தின் முடிவில் மகாதேவர் தோன்றி "என்ன வரம் வேண்டும்?" என்றார்.அதற்கு அவன் "யாதவர்களை வெல்ல ஒரு மகன் வேண்டும்"என்றான்.மகாதேவரும் அப்படியே வரமளித்தார்.கரிய நிறமுடைய ஒரு பலசாலியான மகன் அவனுக்குப் பிறந்தான்.யவன அரசன் பிள்ளை இல்லாததால்,இந்த அந்தணனின் மகனை தன் மகனாக ஏற்றுக் கொண்டு"காலயபவனன்" என்ற பெயரையும் தந்தான்.இப்பிள்ளை பெரியவன் ஆனதும் நாரதரைப் பார்த்து,"மிகவும் பலமுடைய அரசர் யார்..யார்?"என வினவினான்.நாரதரும் ஒரு பட்டியலைத் தந்தார்.அவன் உடன் மதுரையை எதிர்க்கத் திட்டமிட்டான்.இதை அறிந்த கிருஷ்ணன் காலயபவனன் பெற்ற வரத்தை அறிந்து அவனை எதிர்ப்பது கஷ்டம் என உணர்ந்தான்.அதேநேரம் காலயபவனன் போர் தொடுக்கும் போது,ஜராசந்தன் அவனுடன் சேர்ந்து கொண்டால்,பிரச்னையை சமாளிக்க முடியாது என கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான்.


பலகாலம் கோட்டைக்குள் இருந்தே போர் தொடுக்க வேண்டிய இடமாக சமுத்திரத்தின் நடுவே "துவாரகை" என்ற இடத்தை ஏற்படுத்தி,அங்கு யாதவர்களை வைத்து பிறகு காலயபவனனை சந்தித்தான்.ஆனாலும், அவனை சட்டை செய்யாதது போல நடந்து சென்றதால் கால்யபவனனும் இவனைப் பின்தொடர்ந்தான்.திடீரென ஒரு இருண்ட குகை தென்பட கிருஷ்ணன் அதனுள் நுழைந்தான்.உள்ளே தேவ,அசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவியாக அசுரர்களை வென்று விட்டு குகையில் உறங்கிக் கொண்டிருந்தான் முகுந்தன் என்ற மன்னன்.கிருஷ்ணன் உள்ளே போனதைப் பார்த்ததும் காலயபவனனும், குகைக்குள் நுழைந்தான்.இருட்டில் ஒன்றும் தெரியாததால்,உறங்கிக் கொண்டிருந்த முகுந்தனை, கிருஷ்ணன் என  காலால் எட்டி உதைத்தான்.தூக்கத்தில் எழுப்பப்பட்ட முகுந்தன் மிகவும் கோபம் கொண்டு கண்ணை விழித்தான்.அவன் கண்பார்வை பட்டதும் காலயபவனன் எரிந்து சாம்பலானான்.யுத்தத்தில் தங்களுக்கு உதவிய முகுந்தனுக்கு தேவர்கள் கொடுத்த வரம் அது.உறக்கத்திலிருந்து யார் அவனை எழுப்புகிறார்களோ அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள் என்பதே அந்த வரமாகும்.  


ஜராசந்தனின் உறவினனாகிய பீஷ்மகா தன் மகள் ருக்மிணியை சிசுபாலனுக்கு மணமுடிக்க விரும்பினான்.திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது ,கிருஷ்ணன் ருக்மிணியைத்தூக்கிச் சென்று விட்டான்.போர் தொடுத்தவர்களை எல்லாம் பலராமன் வென்றுவிட்டான்.ருக்மிணியின் சகோதரனாகிய ருக்மி,கிருஷ்ணனை வெல்லாமல் நாடு திரும்புவதில்லை என உறுதிமொழி எடுத்து கிருஷ்ணனை எதிர்த்தான்.தோற்றுவிட்ட படியால் தன் நாட்டிற்குத் திரும்பாமல் வேறொரு நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வந்தான். கிருஷ்ணனுக்கும், ருக்மிணிக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னனை ,சம்பராசுரன் என்பவன் தூக்கிச் சென்று கடலில் எறிந்து விட்டான்.அக்குழந்தை தப்பிச் சென்று பின் சம்பாசுரனைக் கொன்றுவிட்டது.பின்பு பிரத்யும்னன் ,ருக்மியின் மகளை மணந்து கொண்டான்.அந்த மணவிழாவில் ருக்மியும், பலராமனும் சூதாடுகையில்..வாய்ச்சண்டை முற்றிட பலராமன்,ருக்மியையும் அவனுக்கு உதவியாக வந்த அரசர்களையும் கொன்றான்.


பிருத்வியின் மகனான நரகாசுரன்,பிரத்ஜோதிஷ்புரம் என்ற நகரத்திலிருந்து உலகை ஆண்டு வந்தான்.மிகக் கொடியவனான அவன் தேவ மாதர்,அசுரமாதர்,மானிட மாதர் எனபதினாயிரம் பெண்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்தான்.ஒருமுறை இந்திரன்,கிருஷ்ணனிடம் நரகாசுரனின் கொடுமைகளைச் சொல்லி வருத்தப்பட்டான்.உடன், கிருஷ்ணன், கருடனை நினைத்தான்.கருடன் வந்து வணங்கி நின்றதும்..கிருஷ்ணனும், சத்யபாமையும் பிரத்ஜோதிஷ்புரம் சென்றனர்.மிகப் பெரும் போரை விளைவித்து நரகாசுரனைக் கிருஷ்ணன் வென்றான்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11