வாயு புராணம் (சிவ புராணம்) - 10

 பார்வதிக்கு தனியாக ஒரு அரண்மனை இருந்தது.அதன் காவலர்களாக நந்தியும்,பிருங்கியும் காவல் செய்தனர்.அவர்கள் உத்தரவு  இல்லாமல் யாரும் பார்வதியைப் பார்க்க இயலாது.பார்வதியின் தோழிகளான ஜெய,விஜய என்பவர்களுக்கு இந்த நிலை நீடிப்பதில் விருப்பமில்லை.எனவே இது குறித்து பார்வதியிடம் முறையிட்டனர்.அவர்களிடம் பேசிய பிறகு பார்வதி அருகில் இருந்த குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து அழகிய பிள்ளை வடிவம் உண்டாக்கினாள்.பிறகு அந்தப் பிள்ளையை அலங்காரம் செய்து "நீ என் மகன்.உனக்கு கணேசன் என்று பெயர் வைக்கின்றேன்.இன்று முதல் நீயே என் மெய்க்காவலன்" என்று கூறினாள்.


அப்பிள்ளை ஒரு தடிக் கம்பை எடுத்துக் கொண்டு காவல் தொழில் செய்ய ஆரம்பித்தான்.யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை.சிவன் வந்ததும் அவரையும் தடுத்து நிறுத்தி விட்டான்.சிவன்.."நான்தான் சிவபெருமான்" என்று கூறியும்..அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டான்.எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை..அவனைத் தாண்டியும் உள்ளே செல்ல இயலவில்லை.கணேசன் அவரை தடியால் அடித்துத் துன்புறுத்தினான்.உதவிக்கு வந்த நந்தி முதலியவ்ரகளையும் தடியால் அடித்தான்.பின்னர் அங்கு வந்த பிரம்மா, விஷ்ணுவையும் விடவில்லை. அங்கு ஒரு போரே மூண்டது.பிரம்மா முதலானோர் பயன் படுத்திய எந்த ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.இந்நிலையில் விஷ்ணு ஒரு சூழ்ச்சி செய்தார்.தந்திரத்தால் தான் இவனை வெல்ல முடியும் என உணர்ந்து சிவனிடம் "நாங்கள் முன்பக்கம் சண்டையிடுகையில்..பின்புறமாக வந்து இவனை அடக்க வேண்டும்" என்றார்.விஷ்ணுவின் சக்கரம் கூட பயன் படவில்லை எனத் தெரிந்ததும்..அவனது பின்புறமாக வந்து தன் சூலாயுதத்தால் சிவன் அவன் கழுத்தை வெட்டி விட்டார்.போர் அமளியில் வெட்டுண்ட தலை எங்கோ போய் விழுந்தது.


இதையறிந்த பார்வதி, மிகவும் கோபத்துடன் ,தன் பிள்ளையை கொன்றவர்களை தான் பார்க்கவோ, மன்னிக்கவோ போவதில்லை என முடிவு செய்து...இந்த பிரபஞ்சத்தையே அழித்துவிடக் கிளம்பினாள்.நாரதர் நிலைமையைப் புரிந்து கொண்டு பார்வதியை சமாதானம் செய்து இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.தான் விதிக்கும் இரு நிபந்தனைகளுக்கு சிவன் உட்பட்டால் தன் கோபத்தை அடக்கிக் கொள்வதாகக் கூறினாள்.அவள் சொன்ன நிபந்தனைகள்..

1)பிள்ளையின் உயிரை திரும்பத் தர வேண்டும்

2)சிவகணங்கள் அனைத்திற்கும் அப்பிள்ளையை தலைவனாக ஆக்க வேண்டும்

இரண்டு நிபந்தனைகளுக்கும் சிவன் ஒப்புக் கொண்டார்.ஆனாலும்..நிபந்தனையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது.பிள்ளையின் தலை எங்கோ சென்று விட்டதால் தேடி எடுக்க முடியவில்லை.அதனால் சிவன் தன் உடன் வந்தவனை அழைத்து..முதலில் நீ யாரை சந்திக்கின்றாயோ..அந்த வடிவத்தின் தலையைக் கொய்து கொண்டு வா  எனக் கட்டளையிட்டார்.அவ்வாறு போனவனுக்கு முதன் முதலில் கிடைத்தது யானை ஒன்றின் தலையாகும்.அந்த யானையின் தலையை இந்தப் பிள்ளையின் தலையில் பொருத்தி , சிவன்,விஷ்ணு,பிரம்மன் ஆகிய மூவரும் சேர்ந்து அதற்கு உயிர் ஊட்டினர். சிவ புராணத்தின் படி இதுவே கணேசன் பிறந்த கதையாகும். 


Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11