வாயு புராணம் (சிவ புராணம் ) -5

 பார்வதியின் தவம்

-----------------------------

சிவபெருமானிடம் மனதைப் பறி கொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்துவிட்டதால்..என்ன செய்வது? என அறியாது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.அப்பொழுது நாரதர் வந்து"அம்மா! நான்முகனும்,விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. நீங்கள் முன்னர் செய்த தவத்தைவிட கடுமையான தவம் மேற்கொண்டால் அவரை மணக்கலாம்.எனவே நீங்கள் "கௌரிசிகரம்"என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்"என்று கூறினார்.


பார்வதியும், தன் தாய்,தந்தை அனுமதி பெற்று தம் அணிகல், ஆடைகள் அனைத்தும் துறந்து மரவுறி உடுத்தி கௌரிசிகரம் மலையுச்சிச் சென்று தவம் இருந்தாள்.வெயில், மழை,குளிர், பனி ஆகிய எதைக் கண்டும் துவளாது தவத்தை மேற்கொண்டாள்.அவள் தவத்திற்கு அஞ்சி அங்கிருந்த கொடிய விலங்குகள் அப்பால் சென்று விட்டன.தேவர்கள் அனைவரும் கூடி, சிவனிடம் சென்று, "ஐயனே! பார்வதியின் கடும் தவத்திற்கு பரிசாகத் தாங்கள் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் "என்றனர்.


அதற்கு இணங்க சிவன், அந்தண வேடம் பூண்டு பார்வதியின் பர்ணசாலைக்குச் சென்றார்.அந்தணரைக் கண்ட பார்வதி,அவருடைய பாதங்களுக்கு மலரிட்டு வழி பட்டாள்.அந்த வேதியர், "அம்மா..எதற்கு தவம் செய்கிறாய்?" என்றார்.  


பார்வதி, காரணத்தைக் கூறியதும்,"அம்மா..பெரும் தவறு செய்து விட்டாய்.சிவபெருமான் ஒரு பைத்தியக்காரன்.ஐந்து முகமும்,சாம்பல் பூசிய உடலும்,ஜடா முடியும்,பாம்பை அணிந்தவனுமாகிய  அவனை மணக்க நினைப்பது முட்டாள்தனமே" என்றார் அந்தணர்.


கடுங்கோபம் கொண்ட பார்வதி,"ஏய் கிழவரே! நீர்தான் முட்டாள்.சிவபெருமான் பெருமையினைத் தெரியாமல் உளருகிறீர்கள்.உம்மைப் பெரியவர் என நினைத்து மலரிட்டு வணங்கியது என் தவறு.உன் முகத்தில் விழிப்பதே பாவம்.நான் வெளியே போய் விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு பார்வதி திரும்பியதும்,"பார்வதி..திரும்பிப்பார்.நீ யாரை நினைத்துத் தவம் செய்தாயோ அந்த சிவனே வந்துள்ளேன்" என்றதும்..பார்வதி திரும்பிப் பார்த்து பெரு மகிழ்ச்சியடைந்தாள்.சிவன், "என்ன வரம் வேண்டும்" எனக் கேட்ட போது.,"எல்லோர் எதிரிலும் என்னை மணந்து கொள்ள வேண்டும்" என்று பார்வதி கேட்க..சிவன் அதற்கு ஒப்புக் கொண்டார். 

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11